பாடசாலைகளின் கட்டட மரபுரிமைகள்: பழைய மாணவர் சங்கங்களும் அபிவிருத்தி நிதிகளும் | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன்
Description
இன்றைய சமூக அசைவியக்கப் பின்புலத்தில் தோன்றியுள்ள படிப்பு – பாடசாலை முதலியன தொடர்பாகத் தோன்றியுள்ள புதிய நிலைப்பாடுகள் பல பாடசாலைகளை அளவுக்கதிகமான மாணவர் தொகையால் வீங்க வைத்திருக்கிறது – அவை திரட்டும் தனிப்பட்ட நிதிகள், அரச நிதிகள் உலக வங்கி உட்பட NGOக்களின் சிறப்பு நிதிகள் எனப் பல நிதி மூலங்களூடாகப் பாடசாலைகள் பலவற்றினதும் நிதி முதல்கள் அதிகரித்துள்ளன (ஆனால் அவை பங்கிடப்படும் முறை உட்பட்ட விடயங்கள் பற்றி இக் கட்டுரை எதனையும் பேச முனையவில்லை). இவ்விதமான நிதிகள் ‘அதனை – இதனை செய்யாவிட்டால் பணம் திரும்பி விடும்’, ‘அவங்கள் தாறாங்கள் ஏன் விடுவான்’ என்ற முதலான எண்ணங்களுடன் பெறப்படும் இந்நிதிகளூடாகக் கட்டடம் ஒன்றைக் கட்டலாம் எனும் சந்தர்ப்பம் கிட்டும்போது எந்தக்காரணம் கொண்டும் எம்மிடமுள்ள சமூக பண்பாட்டுத் தகைமையுடைய மரபுரிமைக் கட்டடத்தில் கை வைப்பதில்லை என்பது எமது தீர்க்கமான முதலும் கடைசியுமான முடிவாக இருக்கவேண்டும். ஆனால், நாமோ முதலில் அதிற்தான் கைவைக்கிறோம்.
அது மட்டுமின்றி மேற்படி ஒரு புதிய கட்டுமானமொன்று உருவாக்கப்படுகையில் அது ஏற்கனவே எங்களிடம் இருக்கின்ற மூத்த மரபுரிமைக் கட்டடத்தின் தொடர்ச்சியாக, அதன் பண்புகளை பகிர்ந்தொரு பொதுமைப்பாட்டைக் கொண்டு இருக்கவேண்டும் என்பதும் அதில் முக்கியமானது. இல்லாவிட்டால் அது ஒரு பிச்சைக்காரனின் வாந்தி போல ஒன்றுடன் ஒன்று சம்மந்தமற்று ஒரு சுய அடையாளம் அற்றவொன்றாகிவிடும். இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி எடுத்த கரிசனம் நல்லவொரு முன்னுதாரணமாகும். அவர்கள் தம் மூத்த கட்டுமானப் பண்புகளை தமது புதிய கட்டங்களிலும் நீட்டிக்க வைத்தல் காரணமாக கல்லூரிக்கு ஒரு கட்டுமான அடையாளத்தை (architectural identity) கொடுக்க முயற்சிக்கின்றார்கள்.